Saturday, August 2, 2008

எலியாஸ்

எலியஸை தேடிப்போகச் சொன்னார்கள்
அவசரமானதொரு பார்ஸல்
காத்திருந்தது அவனுக்கு
எலியஸை எனக்கு பரிச்சயமில்லை
முன்பின் பார்த்ததுமில்லை

அடையாளம் சொன்னார்கள்
மாநிரம்
சராசரிக்கு குறைவான உயரம்
தட்டை உருவம்
தழும்பு முகம்
அடர்ந்த மயிர்

சிக்கலான வரைபபடங்களுக்குள்
புகுந்து வளைந்து
செல்ல வேண்டியிருந்தது
எலியாஸை தேடி

ஒவ்வொரு திறவுகளுக்குப் பின்னும்
தன்னை பற்றிய
சந்தேகக் குறிப்புகளை மட்டும்
மிச்சம் வைத்துவிட்டு
மர்மமானதொரு கதவுக்குப் பின்ணிருந்து
புன்னகைத்துக்கொண்டிருக்கிறான்
எலியாஸ்

கணக்கிறது
அவனை சென்றடைய வேண்டிய
பார்ஸல்

எலியாஸ் இன்று எனது
அதீத உச்சரிப்புகளுக்கும்
விசாரிப்புகளுக்கும்
விரோதங்களுக்கும் உள்ளாகிறான்

சுடரின் வெப்பத்தில்
உருகி வழியும் மெழுகாய்
கரைந்து உறைந்து கொண்டிருக்கிறது
அவனது சித்திரம்

ஒரு கதவின் பாதுகாப்புக்குள்
பதுங்கியிருந்த எண்ணற்ற முகங்களில்
யாருக்கும் பொருந்தவில்லை
எலியாஸுக்காக நான்
உருவாக்கியிருந்த
தழும்பு முகம்

எலியாஸ் யாருமற்றவன் அல்ல
யாரோ ஒருவணுமல்ல
தான் பெயருக்குள் யாரையோ
புதைத்துக்கொண்டவன்

இறுதியில்
எலியாஸை தெரிந்த
எலியாஸ் அல்லாத
எலியாஸ் ஒருவனிடம்
ஒப்படைத்துவிட்டேன்
அவனது பர்ஸலை
அவனைப்பற்றிய விசாரணைகளை
விரோதங்களை
உச்சரிப்புகளை
அவனது பெயரை
மற்றும் இப்பிரபஞ்சத்தில்
எனக்கும் அவனுக்குமான
ஈரமற்ற ஒரு துளி தொடர்பையும்

திரும்புகையில்
எலியாஸைப் பற்றிய
அடையாளத் தகவல்களிலும்
மனச் சித்திரங்களிலும்
அவனது வயதைப் பற்றிய குறிப்பே
இல்லையென உணர்ந்தேன்

வேறொரு நாள்
காரியாலயத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள்
எலியாஸ்
இத்தனை குறைந்த வயதில்
விபத்தில் மாண்டிருக்க வேண்டாமென்று...!

No comments: