அத்தனை பிரயத்தனமான
திட்டங்கள்
வரையறைகள்
எச்சரிக்கைகள்
எல்லைகளுக்குள்
கவனமான கால் பதிவுகளுடன்
துவக்கியே ஆகவேண்டியிருக்கிறது
ஒரு ஸ்னேகத்திற்கான பயணத்தை
மதில்கள் சூழ்ந்த உனது
கோட்டை முகப்புகளில் காத்திருந்து
நீ அடைக்க முயற்சிக்காத
இடைவெளிகளில்
காற்றாய் புகுந்து
நிழலாய் உலவுகிறேன்
தடை செய்யப்பட்ட உனது
பிரதேசங்களுக்குள்
நீ ஆட்சேபிக்கத் தயங்கிய
அத்துமீறல்களுடணும்
கள்ளம் பதிந்த எட்டுக்களுடணும்
ஒரு திருடனாய் உள் நுழைகிறேன்
உனது கோட்டையின்
மர்ம அறைகளுக்குள்
வருகைகள் உணர்ந்தும்- எனது
பின் தொடரலை அனுமதிதவளாய்
புதிராய் புன்னகைத்து
ஓடி ஒளிகிறாய்
இருள் சூழ்ந்த உனது
ரகசிய பாதாளங்களுக்குள்
ஒரு பூனையாய் பதுங்கி
மீண்டும் மீண்டும் முன்னேறுகிறேன்
விடை தெரியாத உனது
ஸ்நேகங்களை நோக்கி
இறுதியில்
ஒரு பட்டாம்பூச்சியைப்போல்
அத்தனை லாவகமாய் மடக்கிப்
பிடிக்க வேண்டியிருக்கிறது
பாதாளத்தின் அந்தரங்க இடுக்குகளுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
உனது ஸ்நேகங்களை
காதலின் ஒவ்வொரு நிலையாய்
உள் நுழைந்து
உயிர் புகுந்து
ஸ்நேகங்களை திறந்து பார்க்கும்
சூட்சுமாங்கள் நிறைந்த- இந்த
சாதுரிய சதுரங்கத்தில்
நாம் இருவருமே ஒருவரையொருவர்
ஜெயித்துக்கொள்கிறோம்- அல்லது
தோற்கடிக்கிறோம்
ஒவ்வொரு காய் நகர்வுகளிலும்
ஒவ்வொரு திறவுகளிலும்
ஒவ்வொரு அவிழ்ப்புகளிலும்
ஒவ்வொரு கண்டடைதல்களிலும்
இனம்புரியாத
ஒரு தரிசனத்தின் பரவசத்தில்
சுயம் இழக்கிறோம்
விழிகளின் ஆழத்தில் பதுங்கியிருக்கும்
அந்தரங்கங்களின் மீதான ஊடுருவல்கள்
அத்தனை சத்தியமாய் இருந்ததில்லை
நம் இருவருக்குமே- எனினும்
அறுபட்ட பார்வைகள் இட்டுச்செல்லும்
ஒரு மௌனத்தின் ஆழத்தில்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
பாசாங்குகள் களைந்த- நம்
மனதின் நிர்வாண உரசல்கள்
குறுகுறுப்புகளின் தடுமாற்றத்தில்
சிக்கி கரையேற முடியாமல்
மூழ்கிக் கரைந்து விடுகின்றன
நம் சந்திப்புகள்
தேங்கிவிடும் கேள்விகளிலும்
எஞ்சிவிடும் பதில்களிலும்
நீள்கிறது நம் ஸ்னேகத்தின் பயணம்
என்றாவது ஒருநாள் முழுமையடையாளம்
ஏதேனும் ஒரு சந்திப்பு
அங்கே காத்திருக்கிறது
நமக்கான மற்றுமொரு புறப்பாடு
புறப்பாட்டிற்கான போதிய
அவகாசங்கள் இருந்தபோதும்
இப்போதிருந்தே நிகழ்ததிக்கொண்டிருக்கிறோம்
நிச்சயமில்லாத அந்த
நீண்ட நெடும் பயணத்திற்கான
ஆயத்தங்களை
ஊடல்களும்
பிரிவுகளும்
கூடல்களும்
அதன் சாரமே
சொல்லப்படாத வார்த்தைகளால்
பகிர்ந்து கொள்கிறோம்
நம் சரித்திரங்களை
தீண்டப்படாத ஸ்பரிசங்களால்
தழுவிக்கொள்கிறோம்
மூச்சு முட்டும் நம்
அணைப்புகளை
இருளில் கரிய உருவங்களாய்
பதுங்கியிருந்த-நம்
ஸ்னேகத்தின் நிழல்கள்
குதூகலத்தின் எல்லை
மறந்த ஒரு கணத்தில்
அகப்பட்டுக்கொள்கின்றன
உடற் கூசும் வெளிச்சத்தின்
ராட்சத கண்களிடம்
வழக்குகள்
வஞ்சங்கள்
ஏற்றதாழ்வுகள்
மிரட்டல்கள்
நிர்பந்தங்களின்
சூழ்ச்சிகளில்
நம்மையுமறியாமல்- நமக்குள்
நிகழ்ந்துவிடுகின்றன
சில நகக்கீறல்கள்
காயங்களின் காந்தலில்
ஆராய முற்படுகிறோம்
துரோகங்கள்ளுக்கான
காரண காரியங்களை
பரஸ்பர பழிசுமத்ல்களுக்குபின்
மீண்டும் துளிர்க்கவே செய்கிறது
சூழ்ச்சிகளின் நகங்களால்
அத்தனை எளிதாய்
கிள்ளி ஏறியக்கூடிய
வலுவிழந்த நம் ஸ்நேகங்கள்
மீண்டும் மீண்டும் இணைய முயற்சித்து
கண்ணாடித் துண்டுகளாய்
சிதறிப்போன- நம்
ஸ்நேகங்களின் சில்லுகளிலிருந்து
நழுவிக்கொண்டிருக்கின்றன
உனது பிம்பங்கள்
நடுவே நான் மட்டும் நிற்கிறேன்
ரத்தம் கசியும் கால் தடங்களுடனும்
ஏமாற்றத்தின் ரணங்களுடனும்
சலனங்கள் வற்றி
உறைந்துவிட்ட உனது மௌனத்தில்
இன்னும் உறையாமல்
வழிந்து கொண்டிருக்கிறது
நம் ஸ்னேகத்தின் ஒரேயொரு
ரத்தக்கோடு
மீண்டும் ஒரு
இணைவுக்கான சாத்தியங்கள்
மடிந்து கொண்டிருக்கின்றன- என்றாலும்
வழிந்து கொண்டிருக்கும்
ரத்தக்கோடுகளையாவது
கழுவ முற்படலம்
எஞ்சி நிற்கும்- உனது
ஒரேயொரு பதிலால்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment