Friday, August 1, 2008

பராமரிக்க தெரியாதவனின் கனவுகள்

இழப்புகளின் ரணங்கள் ஆறிய ஒரு ஆசுவாசத்தில்
எனது பழைய கனவு ஒன்றை திறந்து
உள்ளே நுழைந்தபோது
என் கனவுகள் சிதறிக்கிடந்தன
துண்டுகளாய் துகள்களாய் சிதைந்திருந்தன
சில துண்டுகள் காலத்தின் வெப்பத்தில்
உருகிக் கரைந்திருந்தன
சிதறிய துகள்கள்
காற்றின் அந்தரங்கத்தில் புதைந்திருந்தன
எஞ்சியிருந்த சில துண்டுகளை என்னால்
அடையாளம் காணவே முடியவில்லை

வேறொருவரின் கனவுக்குள் வந்துவிட்ட தடுமாற்றங்களுடன்
விலகித் தயங்கி பின்னால் நகர்கையில்
எஞ்சியிருந்த எனது காலடி தடங்கள் நிச்சயப்படுத்தின
இவை என் கனவுதாநென்று

எனக்கு தெரியாமல் என் கனவுக்குள்
யார் யாரோ வந்து போயிருக்கிறார்கள்
என்னென்னவெல்லாமோ நிகழ்ந்திருக்கிறது
எனக்கு தெரிந்திருக்கவில்லை
கனவுகளை எப்படி பாராமரிப்பதென்று
எவருக்கேனும் தெரிந்திருக்குமா
என்பது கூடசந்தேகமே

சிதறியவற்றை கூட்டி அள்ளி சேகரித்தபோது
அவை பிடியிலிருந்து நழுவிக்கொண்டேயிருந்தன
ஒரு துண்டை மட்டும் எடுத்து
ஊதித் துடைத்து தூசி தட்டியபோது
தட்டி விடப்பட்டேன்
வேறொருவருக்குச் சொந்தமானது என்றார்கள்

பராமரிக்க தெரியாதவனின் கனவுகள்
தானாகவே ஊர்ந்து நகர்ந்து வேறொருவரிடம்
அடைக்கலம் தேடிக்கொள்கின்றன
ஆம் என் கனவு வேறொருவருக்கு
நனவாகியிருந்தது

என் கனவு என்னை விட்டு
வெகு தூரம் சென்றிருந்தது
எனக்குத் தெரிந்திருக்கவில்லை
அது எப்போதோ என்னை விட்டு
விலகி விட்டதென்று....!

No comments: