பிரிவு நிகழும் கணம்
அத்தனை நிதானமாக
அத்தனை துல்லியமாக
அத்தனை உக்கிரமாக நிகழ்வதில்லை
சினிமாவில் நிகழ்வது போல்
ஒத்திகை பார்த்த அசைவுகளை மீட்பதற்குள்
சேகரித்த வார்த்தைகளை திரட்டுவதற்குள்
முதல் வார்த்தையை பற்றி அடுத்த வார்த்தைக்குள் நுழைந்து
அசாதாரணமான வார்த்தை ஒன்றை வெளிப்படுத்துவதற்குள்
சட்டென்று ஒரு கண்ணீர் துளி எட்டிப்பார்ப்பதற்குள்
காலத்தில் உறையும் கணமாக மாற்றும்
மகத்துவம் ஒன்று நிகழ்வதற்குள்
பாசாங்குகளின் முகமூடி விலகுவதற்குள்
அத்தனை நாசூக்காக
அத்தனை எளிதாக
அத்தனை சம்பிரதாயமாக
அத்தனை கவனமாக நிகழ்ததிவிட்டோம்
பிரிவு நிகழும் கணத்தை
சொல்லுக்கு சொல்
புன்னகைக்கு புன்னகை
கை குலுக்கலுக்கு கை குலுக்கல் என
வழிபோக்கணுக்கு முகவரி சொல்வது போல்
நிகழ்ந்துவிட்டது
பிரிவு நிகழும் கணம்
சொல்லப்படாத வார்த்தைகளும்
சிந்தப்படாத கண்ணீரும்
இந்த தணித்த கோடையின் வெப்பத்தில்
உலர்ந்து ஆவியாகும்
பின்பொருநாள்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment